தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்

தமிழ் ஆர்வலர்கள் குழு

இந்த குழுவின் நோக்கம் என்ன, செயற்பாடுகள் என்ன என்பதை விளக்கும் ஒரு சிறு முகவுரை.

இதன் பெயருக்கு விளக்கம் தேவையில்லை. தமிழில் " ஆர்வம்" உள்ள எவரும், நாடு, மதம், தலைமுறை இவற்றை தாண்டி இந்த குழுவில் அங்கத்தினராக சேரலாம். ஆனால் தமிழின் பெயரால் எத்தனையோ குழுக்கள். அப்படி இருக்க இது ஏன் தேவை? இது மற்றவைகளிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றது என்பதையும் விளக்க முயலுகிறோம்.

வேற்று மொழி பயிலப்படும் நாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு, தமிழில் உள்ள இலக்கிய நூட்களைப் படிப்பதற்கும், அப்படி படித்து அனுபவித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு தடம் வேண்டும் என்ற வேட்கை பல நாட்களாகவே இருந்து வந்தது. அந்த ஒரு நோக்கத்தில் தான் இந்த குழு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி செல்வதற்கு மூன்று படிகள் வகுக்கப் பட்டன.

அவை சங்க நூல்களைப் படித்தல், ( அப்படி படித்ததைப் நண்பர்களுடன்) பகிர்தல், (அந்த தூண்டுதலில் புதிய இலக்கியங்களைப் ) படைத்தல் என்பன. படித்தல், பகிர்தல், படைத்தல் என்ற இந்த மூன்று இலக்குகளை நோக்கித்தான் இந்த குழுவின் கொள்கை, நோக்கம், செயற்பாடு எல்லாமே நடைபெறுகிறது. மிச்சிகன் மாநிலத்தில் உருவாகிய இதில் தற்போது வட அமெரிக்காவில் உள்ள மற்ற மாநிலங்களிலிருந்தும் மட்டுமில்லாமல், தாய் நாட்டிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் அங்கத்தினர்கள் இருப்பது, நாங்கள் நல்லதொரு இலக்கை நோக்கி நடை போடுகிறோம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. இதை எப்படி நடத்தி செல்வது? இது ஒரு கேள்விதான். அதற்கும் நாங்கள் ஒரு வழி கண்டோம். வாரம் ஒரு முறை, ஒவ்வொரு திங்கட் கிழமை தோறும், தொலை பேசியில் அங்கத்தினர்கள் கூடுவது, இலக்கியங்களைப் பற்றி விவாதிப்பது என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சங்க இலக்கிய இரவு

சங்க இலக்கியம் என்று நாம் எதை சொல்கிறோம்? சங்க கால புலவர் பெருமக்கள் இயற்றிய பாடல்களே சாதாரணமாக சங்க இலக்கியம் என்னும் பெயரால் குறிக்கப் படுகிறது. இவை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை எட்டுத்தொகை , பத்துப் பாட்டு என்பன. இதில் எட்டு தொகை என்பது பல புலவர்கள் பல் வேறு கால கட்டங்களில், மாறுபட்ட பல பொருள்களை பற்றி இயற்றிய பாடல்கள். அவற்றில் சொல்லப்படும் பொருளை ஒட்டியும் மற்றும் பாடல்களின் அடிகளை ஒட்டியும் தொகுக்கப்பட்டவை எட்டுத் தொகை.

இவற்றில் நாம் கல்லூரிகளிலும், கலாசாலைகளிலும் படித்த அகநானூறு, புறநானூறு, குறிஞ்சித்தொகை, நற்றிணை போன்ற நூல்கள் அடக்கம். ஆனால் பத்துப்பாட்டு என்பது ஒவ்வொரு பாடலும் ஒரு தனி நூலாகும். ஒரு பொருளையோ அல்லது ஒரு மன்னனையோ கருப்பொருளாக வைத்து பாடப் பட்டது. இவை ஒவ்வொன்றும் தனி நூல்கள். உதாரணமாக சோழ மன்னனையும் பூம்புகார் நகரத்தையும் வைத்து பாடப்பட்டது பட்டினப்பாலை. அதைபோல், பாண்டிய மன்னனுக்கு நிலையாமையை கூறும் முகத்தான் மதுரை மாநகரை வர்ணித்து பாடப்பட்டது "மதுரை காஞ்சி' . ஒரு புலவர் மற்றோரு புலவனை வழி நடத்தும் பாடல்கள் ஆற்றுப் படை பாடல்கள் என்று இவை பலவகைப்படும்.

சங்கம் மருவிய காலம் என்று சொல்லப்படும் காலங்களை வெளி வந்த பல நீதி நெறி நூல்கள் கீழ் கணக்கு நூல்கள் என்று சொல்லப்படும். இவற்றில் நமக்கு நன்கு தெரிந்த திருக்குறள், நாலடியார், திரிகடுகம் , ஆசாரக் கோவை போன்ற நூல்கள் உண்டு.

இதில் ஐம்பெரும் காப்பியங்கள் என்று சொல்லப் படுபவை சிலப்பதிகாரம், மணிமேலை வளையாபதி போன்ற நூல்கள்.

சிற்றிலக்கியங்கள் என்று இதைச் சொல்லுகிறோம்? பெருங்காப்பியத்திற்கு உள்ள இலக்கணங்கள் முழுதும் அமையாமல், அளவிலும் சிறிதாக உள்ளவை. இவற்றில் முக்கூடற் பள்ளு, குற்றால குறவஞ்சி, குமேரச சதகம் கலிங்கத்து பரணி போன்ற நூல்கள் அடங்கும்.

சோழர் கால இலக்கியங்கள் என்று பெரும்பாலும் சொல்லப்படுபவை கம்ப இராமாயணமும், சேக்கிழார் இயற்றிய பெரிய புராணமும் ஆகும்.

இதன் படி , இரண்டாண்டு காலமாக அகநானுறு, புறநானூறு, பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி வள்ளுவம், நாலடி, நாநாற்பது, பள்ளு, குறவஞ்சி, கம்பன் காவியம், பெரியவர் புராணம் போன்ற பல நூல்கள் நணபர்களால் பேசப்பட்டன. தான் படித்து இரசித்து அனுபவித்த பாடலை ஒருவர் பகிர்வார், அதன் வெறும் பொருள் மற்றுமின்றி , அதன் இலக்கிய சுவை, அணிகள் , அது எந்த திணையை போன்ற அனைத்தையும் விளக்குவார். அதைத் தொடர்ந்து, வினாக்கள் எழுப்பப்பட்டு, விடைகள் பகிரப்படும். அதை தொடர்ந்து அன்றைய கால கட்டத்திற்கும் இன்றைய கால கட்டத்திற்கும் வாழ்வியலில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளும், அது பற்றிய விவாதங்களும் நடைபெறும்.

இந்த நிகழ்சிகளை தொகுத்து எடுத்த வழங்குவதற்கு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஒருங்கிணைப்பவர் உண்டு. அவர் இலக்கிய நூல்களில் சிறந்த பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இவர் கடமை, யார் யார் எந்த பாடல்களைப் பகிர விரும்புகிறார்கள் என்று கண்டு, அந்த பாடல்களை நிகழ்ச்சிக்கு முன்பு, மற்ற அங்கத்தினர்களுக்கு தெரியப்படுத்துவதும், நிகழ்சியன்று, அதை நேரம் நோக்கி நடத்துவதும்தான்.

சங்க இலக்கியம் சார்பில் கம்ப இராமாயணப் பட்டிமன்றம் ஒன்று அரங்கம் ஒன்றில் அருமையாக நடைபெற்றது. குற்றால குறவஞ்சி, குறுந்தொகை இலக்கிய அறிமுகமும் ஜூம் வழியே நடைபெற்றன. பட்டினப் பாலை நிகழ்வு ஒன்று நடத்தப பட இருக்கின்றது.

நவீன இலக்கிய இரவு

நவீன இலக்கிய இரவில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் புத்தக அறிமுகங்கள் நடைபெறுகிறது. ஒரு படைப்பைப் பகிர்ந்தப்பின் அனைவரும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வர். ஒரே படைப்பை ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வித்தியாசப்படும். புதுப்புது கோணங்களில் அணுகப்படும் நிறைய கேள்விகள் எழும் அதற்கான விடைகளும் அந்த விவாதத்தில் கிடைக்கும். நவீன இலக்கிய இரவில் நிறைய எழுத்தாளர்களின் அறிமுகமும் படிக்க வேண்டிய சிறந்த புத்தகங்களின் அறிமுகமும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த குழுவில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. பல ஊர்களில் இருந்து பல்வேறு பின்புலத்தோடு ஆர்வலர்கள் இருப்பதால் பலதரப்பட்ட வட்டார வழக்கு நூல்களை இலகுவாக கேட்கும் வாய்ப்பும் அந்த நூல்களில் எழும் கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் சந்தர்ப்பம் இந்த நிகழ்ச்சியில் நிகழ்கிறது. புத்தக விரும்பிகள் அனைவரும் சங்கமித்து படித்ததை பகிரும் நிகழ்ச்சி நவீன இலக்கிய இரவு நிகழ்ச்சி.

முன்பே கூறியபடி இதில் இணைய தமிழ் புலமை தேவையில்லை. தமிழ் ஆர்வமும், இலக்கியத்தை அனுபவிக்கும் அவா மட்டுமே போதுமானது. இதில் அங்கத்தினராக சேர்ந்து, நமது உயிர், உணர்வு, உரம் ஆகிய எல்லாமாக விளங்கும் தமிழ் அன்னையின் சேவைக்கு வாரம் ஒருமுறை நீங்கள் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் நாங்கள் எங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றோர்கள் ஆவோம்.

about
34

Total Posts

76

Favourites

11804

Total Views