தமிழ் ஆர்வலர்கள் குழு
கடந்த நவம்பர் 2019 பார்மிங்டன் நூலகத்திற்கு 200 புத்தகங்கள் தமிழ் ஆர்வலர்கள் முன்னெடுப்பின் மூலம் நன்கொடை வழங்கப்பட்டது. இதன்மூலம் பல வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோல் மற்ற நூலகங்களிலும் இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்று விருப்பப் பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக Troy, Novi, Canton, Rochester Hills, Ann Arbor ஆகிய நூலகங்களில் பெரியவர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களை நன்கொடை கொடுக்கும் முயற்சியை முன்னெடுக்கப்பட்டது.
அதன்மூலம் இதற்கான தொகை $3500 என்று நிர்ணயம் செய்யப்பட்டு , சென்ற முறை போல் இது ஒரு சில நபர்களின் முயற்சியாகவும் பங்களிப்பாக மட்டுமில்லாமல் இதில் மிச்சிகனில் உள்ள அனைத்து தமிழ் மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து மிச்சிகனில் உள்ள தமிழ் மக்களிடம் நன்கொடை பெற முடிவு செய்யப்பட்டது . இதன் ஆரம்பமாக ஜனவரி 2020 மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் ஒரே நாளில் $1250 டாலர் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை வழங்கிய மிச்சிகன் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழ் ஆர்வலர்களின் குழு சார்பாக முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விழாவிற்கு வர முடியாத நண்பர்கள் பலர் , அதன் பிறகு நம்முடைய குழுவில் உள்ள சில நபர்களுக்கு ஆன்லைன் மூலமாக நன்கொடை வழங்கினார்கள். நமக்குத் தேவையான $3700 டாலர் எட்டு நாட்களில் வசூலிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உள்ள சில தன்னார்வலர்களின் மூலமாக புத்தகங்கள் முன்பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதம் இடைவிடாத உழைப்பின் மூலம் அனைத்து புத்தகங்களும் சேகரிக்கப்பட்டது. உலகெங்கிலும் ஏற்பட்ட கோவிட்-19 தொற்றால் இந்தியாவிலிருந்து புத்தகங்களை கொண்டு வருவது தடைபட்டது. பின்னர் கடந்த ஆகஸ்ட் 2020இல் புத்தகங்கள் இந்தியாவிலிருந்து மிச்சிகனுக்கு அனுப்பப்பட்டு செப்டம்பர் மாதம் வந்தடைந்தது. இதற்காக எங்களுக்கு இந்தியாவில் இருந்து உதவி புரிந்த நண்பர் திரு. சண்முகசுந்தரம் மற்றும் திரு. கிருஷ்ண பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த புத்தகங்கள் அனைத்தையும் எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்தார் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
புத்தகங்களை நூலகத்திற்கு கொடுப்பதற்கு முன்னதாக அனைத்து புத்தகங்களையும் பல தன்னார்வலர்களின் மூலமாக நூலகத்திற்கு தேவையான முறையில் அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்றது. முதற்கட்டமாக பார்மிங்டன் நூலகத்திற்கு 200 குழந்தைகள் புத்தகம் அக்டோபர் 1ம் தேதி நன்கொடை வழங்கப்பட்டது. பின்னர் Novi நூலகத்திற்கு 200 குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் 200 பெரியவர்களுக்கான புத்தகங்கள் (மொத்தம் 400) அக்டோபர் 2ம் தேதி நன்கொடை வழங்கப்பட்டது. அதன்பின்னர் அக்டோபர் 7ம் தேதி Troy,Rochester மற்றும் Canton நூலகத்திற்கு 450 புத்தகங்கள் நன்கொடை வழங்கப்பட்டது. இன்னும் சில புத்தகங்கள் Ann Arbor நூலகத்திற்கு ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் Rochester மற்றும் Canton நூலகத்திற்கு குழந்தைகளுக்கான புத்தகங்கள் நன்கொடை வழங்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்குரிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
நன்கொடை வழங்கியவர்களின் விவரம் , புத்தகங்கள் வாங்கிய வரவு செலவு விபரங்கள் அனைத்தையும் கூடியவிரைவில் தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளத்தில் பதிவிடப்பட்டு மிச்சிகன் மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும். எந்தெந்த நூலகத்தில் எந்தெந்த புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அதை எவ்வாறு பொதுமக்கள் எடுத்து பயன் பெறுவது என்று விபரங்களையும் கூடியவிரைவில் அறிவிக்கப்படும்.
மிச்சிகன் நூலகத்தில் புத்தகங்களை கொண்டு சேர்ப்பதற்கு உறுதுணையாக இருந்த நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் தமிழ் ஆர்வலர்களின் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். புத்தகங்களை என்றும் தொடர்ந்து வாசிப்போம். நன்றி